Thursday, 15 June 2017

அகலிகை: கற்புநிலையின் பன்முகங்கள்!



      தமிழில் மட்டுமல்லாது அனைத்து இந்திய மொழிகளிலும் பெண்ணிய சிந்தனை வலுப்பெறத் தொடங்கிய முதல் கணத்திலிருந்தே காப்பிய இலக்கியத்தில் பேசுபொருளாய் இருக்கும் பாத்திரம் அகலிகை. அகலிகை என்பது தமிழாக்கப் பெயர். அஹல்யா என்பதுதான் இதன் மூலம். அளவே இல்லாத அழகுடையவள் என்பது இதன் அர்த்தம். ‘அழகின்மை என்பதே இல்லாதவளாம்! 1 இராமன் வாலியை வதம் செய்த விதம் சரியா; இராமனின்பால் சீதை தீக்குளித்தது சரியா- போன்ற மிகவும் பெயர் பெற்ற விவாதங்களில் ஒன்றுதான் கற்பின்பால் கல்லாய்ச் சமைந்த அகலிகையின் பாத்திரமும் வாழ்வும். அதுவும் பெண்ணிய நோக்கில் சீதை தீக்குளித்ததை விட பன்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்த விவாதப் பொருளாக அகலிகை அமைகிறாள். இதன்மூலம் நவீனப் பெண்ணியப் பார்வையின் கற்புநோக்கில் சீதையை விட மேலான இடத்தையும் பெறுகிறாள். இது குறித்தான இருபத்தாறு வெவ்வேறு கட்டுரைகளின் தொகுப்பை முனைவர் க. ரத்தினம்- ‘இவர்கள் பார்வையில் அகலிகை’ என்று நமக்கு அளித்திருக்கிறார். (ஐந்திணைப் பதிப்பகம், 1998)

வால்மீகியின் அகலிகை:

     வடமொழியில் முதல்காவியம் செய்த வால்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தவர்: மகாமுனி கவுதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கவுதமர் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கவுதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்கிறான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்படுகிறாள். பிறகு-   ‘தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள்’ என்று எச்சரித்து அனுப்ப, ‘உனக்கு நன்றி’ என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கவுதமர் இந்திரனின் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொள்கிறார். ‘மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில்புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய்’ என்று இந்திரனுக்கு சாபமிடுகிறார். ‘அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமனின் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும்’ என்று அகலிகைக்குச் சாபமிடுகிறார். 2

                கம்பரின் அகலிகை:

         கம்பராமாயணத்தின் பாலகாண்டத்தில் ‘கண்ட கல்மிசைக் காகுத்தன் கழல்-துகள் கதுவ’ – என்று தொடங்கும் பதினான்காம் பாடலில் அகலிகை சமைந்த கல்லிலிருந்து பாலராமனின் பாதம் பட்டுத் தோற்றம் பெறுகிறாள். பின்னர் அவளுடைய கதை இவ்வாறு சொல்லப்படுகிறது: அகலிகைமேல் ஆசை கொண்டு அவளை அனுபவிக்க விரும்பிய இந்திரன், அகலிகையின் கணவன் கவுதம முனிவர் காலைக்கடன் முடிக்க வெளியில் சென்ற நேரம் பார்த்து அவரைப்போல் உருமாறி அகலிகையின் வீட்டினுள் நுழைந்தவிடுகின்றான். தன் இச்சையைத் தீர்க்க அகலிகையை அணைக்கின்றான். வந்தது கணவன் என்று நம்பிய அகலிகை அவனுக்கு இடம் தருகின்றாள். ஞான திருஷ்டியினால், நிலை உணர்ந்த கவுதமர் வீடு நோக்கி வர- இந்திரன் பூனையாக மாறி ஓடிமறைகின்றான். கவுதமரும் இந்திரனைச் சபித்து அகலிகை கல்லாக மாறச் சாபமிடுகின்றார். ‘பிழை பொறுத்தல் பெரியோர் கடனே’ என வேண்டிக்கேட்ட அகலிகைக்கு ''இராமன் காற்துகள் பட்டு நீ மீண்டும் பெண்ணாகக் கடவது'' என சாபவிமோசனம் கொடுக்கின்றார்.3




                   வியாசபாரதத்தில் அகலிகையின் கதை:

           பாரதக் கதை குழப்பமே இல்லாத ஒன்றுதான். “சாந்தி பர்வத்தில் தர்மருக்கு பீஷ்மர் உபதேசம் செய்யும் பீஷ்ம கீதையில் வரும் கதைகளுள் ஒன்றாக அகலிகை வரலாறு இருநூற்றெழுபத்து இரண்டாவது அத்தியாயமாக இடம் பெற்றுள்ளது,” என்று குறிப்பிடுகிறார் . ரத்னம். 4  தர்மர், எந்தக் காரியத்தை விரைந்து முடிக்க வேண்டும், எதைத் தாமதிக்க வேண்டும். என்ற தர்மத்தை உணர்த்தும்படி பீஷ்மரிடம் கேட்கிறார். அப்போது பீஷ்மர் சொல்லும் கதைதான் அகலிகை கதை.

              இந்தக் கதையில் கவுதமரின் உருவில் வந்திருப்பது இந்திரன் என்று அறிந்தேதான் அகலிகை அவனுடன் கூடலில் ஈடுபடுகிறாள். இந்திரனே தன்மீது மோகம்கொண்டது குறித்து அவளுக்குப் பெருமிதம் இருக்கிறது.  அகலிகைக்கும் கவுதமருக்கும் சிரகாரி என்று ஒரு மகன் இருக்கிறான். அவன் பாரத காலத்து ஹாம்லட்டாக 5 இருக்கிறான்யோசித்து யோசித்து யோசனையில் தாமதித்து செயல்கள் அனைத்தும் முடங்கிப் போவது அவனுக்கு வாடிக்கையாக இருக்கிறது. இந்த சிரகாரியிடம்தான் கவுதமர் காரணம் சொல்லாமல், “உன் தாயைக் கொல்என்று உத்தரவிட்டுவிட்டு காட்டுக்குப் போவதாகத் தொடங்குகிறது பாரத அகலிகையின் கதை.

            சிரகாரிக்கு அப்பா ஏன் அப்படி சொல்கிறார் என்பது புரிவதில்லை. அப்பா சொன்னதைச் செய்வது சரியா தவறா, தர்மத்துக்குத் தக்கபடி இருக்கலாமா கூடாதா, எது தர்மம் என்று பல்வகைப்பட்ட சிந்தனைகளில் காலம் தாழ்த்த நேரிடுகிறது-  ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் சொல்வதுபோல், மனசாட்சி நம்மைப் போல் அவனையும் கோழையாக்கி விடுகிறது. காட்டுக்குச் சென்ற கவுதமரின் கோபம் தணிகிறது. அவர் நடந்ததை நினைத்துப் பார்க்கிறார்- ‘அதிதியாக வந்த இந்திரனிடம், ‘நான் உன்னைச் சேர்ந்தவன்.’ என்று நான் சொன்னதால்தானே இவ்வளவும் நேர்ந்தது?-  பாவம் இந்திரன்தான் என்ன செய்வான், அகலிகைதான் என்ன செய்வாள், எல்லாரையும் மன்னித்துவிட வேண்டியதுதான்,” என்று முடிவெடுக்கிறார் அவர்.

          எதையும் தள்ளிப் போடும் சிரகாரி இதையும் தள்ளிப் போட்டிருக்கக் கூடாதா என்ற ஏக்கத்துடன் வீடு திரும்பிய கவுதமரின் காலடியில் கோடாலியை போட்டு விட்டு நமஸ்கரிக்கிறான் சிரகாரி. எல்லாம் நல்லபடியே முடிந்தது என்று கவுதமர் தன் மகனை வாரியணைத்து வாழ்த்துகள் கூறி, தேவைப்பட்ட காரியங்களைத் தாமதித்துச் செய்வதால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டு சில சுலோகங்கள் அருளுகிறார்.

              தமிழில் அகலிகையின் அறிமுகம்:

         தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல்.மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, ‘இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கவுதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இதுஎன்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. 6

         பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கவுதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத்திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமானதொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பர், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகிறார். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கவுதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்துதன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகிறார் கம்பன். கம்பர் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது.


             மேலும் அகலிகைகள்…

             கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார்அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் கவிதைகள், சிறுகதைகள் என மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன.

               தாகூர் தனது அஹல்யா பிராட்டியில்7 அகலிகையை ‘கலப்பையால் பதப்படுத்தப்படாத நிலம்’ என்கிறார். இந்திரன் மழைக்குக் கடவுள் எனும்போது- பதப்படுத்தப்படாத நிலத்துக்கும் மழைக்குமான தொடர்பு கவிதையாய் உருவாவதை உணரமுடியும்.

        வெ.ப.சு. முதலியார் (1938) தன் மறுவாசிப்புக் கவிதையில் அகலிகை இந்திரனுக்கு அறவுரை சொல்வதாகவும்- அதனையும் மீறி இந்திரன் அகலிகையுடன் வன்புணர்வில் இறங்குவதாகவும் சொல்கிறார்.8 ஸ்ரீ பாத கிருஷ்ணமூர்த்தியின் தெலுங்கு இராமாயணம் (1947) - அகலிகையும் இந்திரனும் கைகுலுக்கிக்கொண்டுப் பிரிவதாக அக்கதையை முற்றிலுமாய்த் தணிக்கை செய்கிறது.9 கு.ப.ரா. தன் நாடகத்தில் அகலிகைக்கு இந்திரன்மீது ரகசிய வேட்கை இருந்ததாகப் புனைகிறார். 10 புதுமைப்பித்தன் அகல்யை, சாபவிமோசனம் என்னும் இரு கதைகளை அகலிகையை மையமாக வைத்து எழுதியிருக்கிறார். அவற்றில் சாபவிமோசனம் கதையில் ராமன் சீதையை சந்தேகப்பட்டான் என்பதறிந்து மீண்டும் கல்லாகிறாள் அகலிகை. 11 கே.பி. ஸ்ரீதேவியின் மலையாளக் கதை (கல்லின் பெண்) நேரடியாகப் பெண்ணியப் பார்வையில் ராமனைக் குற்றவாளியாக்குகிறது. யாரோ முனிவரின் மனைவியை அவள் கற்பிழந்த சாபத்திலிருந்து விடுவிக்கும் சத்தியவான் தன் மனைவியின் கற்பை எப்படி சந்தேகப்படலாம் என்று ராமனின் ‘இரட்டை நிலை’யைச் சாடுகிறது.12 எஸ். சிவசேகரத்தின் தமிழ்க் கவிதை ‘அகலிகை’ (1980) அவள்மீது கிஞ்சித்தும் ஆர்வமில்லாத கல்போன்ற கணவனைக் (கவுதமன்) கொண்டதாகவும் ஆகவேதான் அவள் இந்திரனோடு கலந்துறவாடினாள் என்றும் அப்படி ஒரு கணவனுடன் வாழ்வதைவிட அவள் இறுதிவரைக் கல்லாகவே இருந்துவிடலாம் என்றும் வாதிடுகிறது. 13 அகலிகை உடலால் கவுதமனோடும் மனதால் இந்திரனோடும் வாழ்ந்தாள் என்கிறது ந.பிச்சமூர்த்தியின் கவிதை. 14 மார்க்ஸிய எழுத்தாளரும் விமர்சகருமான கோவை ஞானி, தன் ‘கல்லிகை’யில் கவுதமரை சமயமாகவும், இந்திரனை முதலாளித்துவமாகவும் அகலிகையை உழைக்கும் வர்க்கத்தின் அடையாளமாகவும் படைக்கிறார். இந்த உருவகத்தன்மைகளுக்கு ஏற்றவாறு அகலிகை பகலில் கவுதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கவுதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக்கொள்கிறாள். 15



       இன்னும் பிரபஞ்சன், சிற்பி, வாலி எனப் பலர் அகலிகை என்னும் கருத்தாக்கத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிக்கொணர்ந்திருந்தாலும், எம் வி வெங்கட்ராம் மட்டுமே பாரதக் கதையையொட்டி தன் படைப்பைச் செய்திருக்கிறார். 16 ஏனைய அனைவருக்கும் ராமாயணத்தில் வரும் அகலிகையின் கதையே மீளுருவாக்கத்துக்குத் தேவையான உந்துதல் தருவதாக இருந்திருக்கிறது.

             பாரதத்தில் வரும் அகலிகைக் கதையில் தர்மம் என்பது குறித்த கேள்விகளோ, அதனால் ஏற்படும் உளச் சிக்கல்களோ குறிப்பிடத்தக்க அளவில் பேசப்படவில்லை. இந்திரன் - அகலிகை நடத்தை சற்று உறுத்தலாக இருந்தாலும் அது இயல்பானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடுகிறது. இவர்களுக்கோ கவுதமருக்கோ அந்தப் பின்னிரவின் சம்பவம் எந்த ஒரு குற்ற உணர்வையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் பாபம் சாபம் விமோசனம் என்ற கேள்விகளுக்கே இடமில்லாமல் போய் விடுகிறது. அங்கு தனி மனிதர்கள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய தேவை இருப்பதாகத் தெரியவில்லை : ஏதோ ஒரு தர்மத்தைப் பின்பற்றுகிறார்கள். அதில் தெரிந்தோ தெரியாமலோ பிழை ஏற்படுகிறது, இந்தப் பிழை உணர்ச்சிப் பெருக்காலோ அறிவின் மயக்கத்தாலோ ஏற்பட்டதாக உணரப்படுவதில்லை - ஒரு சூழலின் தவிர்க்க முடியாத கருவிகளாக இவர்கள் இருக்கிறார்கள். அதை உணர்ந்து தங்கள் செயல்களைத் திருத்திக் கொண்டு விடுகிறார்கள். இன்னும் பொதுமைப்படுத்திப் பேசினால், ஏன் இதைச் செய்கிறோம் என்பதைவிட என்ன செய்கிறோம் என்பதே முக்கியமாக இருக்கிறது.

               ராமாயணத்தில் வரும் அகலிகைக் கதையில் பேசப்படும் பிழைக்குக் காரணமாக இந்திரனும் (சூழ்ச்சி) அகலிகையும் (நெகிழ்ச்சி) அமைகிறார்கள். இதனை கம்பர் தன் பார்வையில் அகலிகை மனதால் தவறிழைக்கவில்லை என்று திருத்துகிறார். எனினும் தவறிழைத்த சாபத்திலிருந்து அகலிகை தப்பவில்லை. கணவரை வேண்டி விமோசனத்தை வரமாய்ப் பெறுபவளாகிறாள். அதற்கும் ஒரு காலபுருஷனின் கால்தூசியை வேண்டி காலகாலமாய்க் காத்திருப்பவளாகிறாள். அகலிகையின் தவறுக்கும் ராமனின் கால்தூசிக்குமான தொடர்பை நம்மால் ஒருக்காலும் ஆய்ந்துணர முடியவில்லை! பாரத அகலிகையின் விழுமியங்கள் சூழ்நிலை சார்ந்ததாகவும் ராமாயண அகலிகையின் விழுமியங்கள் அறநிலை சார்ந்ததாகவும் உள்ளது என்பதை இவ்விரு கதைகளையும் அவற்றினின்று முகிழ்த்த உபகதைகளையும் ஒப்பிடும்போது காண்கிறோம் .

     இறுதியாக...

       இவள் கதை வினோதமானது. ஆச்சரியகரமானது. பலப்பல பரிமாணங்களை தாங்கியது. ஆனால், பெண்ணியவாதிகளின் பலத்த சர்ச்சைக்கு இலக்கானது. கற்பு என்னும் கனலுக்கு சனாதன தர்மத்தில் சரியான இலக்கணம் என்ன என்பதை இவள் கதை நமக்கு உணர்த்துகிறது. அகலிகை தனது சாபத்தையும் விமோசனத்தையும் கடந்து கற்பரசிகளில் முதன்மை தகுதி பெற்றவளாகிறாள். புராணங்களில் பேசப்படும் ஐந்து பதிவிரதைகளில் 17 முதலில் வணங்கப்படுகிறாள். பிராட்டி சீதையைக்கூட இவ்விஷயத்தில் முந்துகிறாள். இதுதான் ஆச்சரியம். இவள் கதை ராமாயணத்தில் மிகச்சிறிதாக பேசப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் ஒரு நாற்பது ஸ்லோகங்களில் இவளின் நிகழ்ச்சி அடங்குகிறது. ஆனாலும், அகலிகை மிகப் பெரிய சக்தியாக பேசப்படுகிறாள். அகலிகை கதை பாடாமல் ராமாயண காதை பேசப்படுவதில்லை!



        அடிக்குறிப்புகள்:

5.   ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகங்களில் ஒன்று ஹாம்லெட். கதைத் தலைவன் ஹாம்லெட் டென்மார்க் நாட்டின் இளவரசன். ஹாம்லெட்டின் சிற்றப்பனான கிளாடியஸ் என்னும் கொடுங்கோலன் ஹாம்லெட்டின் தந்தையைக் கொன்று, ஹாம்லெட்டின் தாயை மறுமணம் புரிந்துகொண்டு, நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்கிறான். இதனால் தவிக்கும் ஹாம்லெட்டின் துடிக்கும் உணர்வுகளும் செயல்களுமே இந்த நாடகத்தின் உயிரோட்டம்.
7.   1914-ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி ‘தி நேஷன்’ பத்திரிகையில் கவிதையாக வெளியானது.
10.    Das, SisirKumar (2006). "Epic Heroines – Ahalya". A History of Indian Literature: 1911–1956: Struggle for Freedom : Triumph and Tragedy. A History of Indian Literature. Sahitya Akademi. ISBN 978-81-7201-798-9.
11.    புதுமைப்பித்தன் சிறுகதைகள், ஐந்திணைப் பதிப்பகம், 1987
15.  ’இவர்கள் பார்வையில் அகலிகை’ – (அகலிகை பற்றிய படைப்புகளின் விமர்சனம்) முனைவர் க. ரத்தினம், ஐந்திணைப் பதிப்பகம், 1998
16.     அகலிகை முதலிய அழகிகள், எம்.வி.வெங்கட்ராம், வானதி பதிப்பகம்.
17.  அகலிகை, திரௌபதி, குந்தி, தாரா, மண்டோதரி

No comments:

Post a Comment

அப்துல் கலாம்: காவி நிறத்தின் காதலன்!

அ ப்துல் கலாம் மறைந்த தினத்தன்று பலரும் பகிர்ந்துகொண்ட அஞ்சலி செய்திகளில் சமூக விமர்சகரும் ஆர்வலருமான பேராசிரியர் அ. மார்க்ஸின் பின்...