அப்துல் கலாம் மறைந்த தினத்தன்று பலரும் பகிர்ந்துகொண்ட அஞ்சலி செய்திகளில் சமூக விமர்சகரும் ஆர்வலருமான பேராசிரியர் அ. மார்க்ஸின் பின் வரும் இவ்வரிகள் முக்கிய மானவை எனலாம்: ‘டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பெரிய அளவில் முஸ்லிம் அல்லாத வர்களால் நேசிக்கப்பட்ட ஒரு முஸ்லிம்... அதுவே முஸ்லிம் சமூகத்திற்கு அவர் செய்த மிகப் பெரிய சேவை.’
இந்தியாவின் பெரும்பான்மைச் சமூகமான இந்துக்களுக்கும்
சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான முஸ்லீம்களுக்கும் இடையிலான சகோதரத்துவ மனநிலையை 1991-ஆம்
ஆண்டு டிசம்பர் மாதம் 6-ஆம் தேதிக்கு முன்னும் பின்னுமாக இரண்டாகப் பிரிக்கலாம். இந்தத் தேதிக்குப் பின்னர்தான் பெரும்பான்மை இந்து
சமூகத்தின்மீதான நம்பிக்கையை முஸ்லீம் சிறுபான்மையினர் இழந்தனர். இந்தத் தேதிக்குப்
பின்னர்தான் இந்துக்களுக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதம் என்னும் போக்கு அழுத்தமாய்
உருவானது. இந்நிலையில் பிறப்பால் முஸ்லீம் சமூகத்தில் பிறந்த கலாமை முஸ்லீம் அல்லாத
பிறமதத்தினர் குறிப்பாக இந்துக்கள் பெருமளவில் ஆராதித்தார்கள் என்பது ஒரு ஆச்சரியமே.
அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முக்கியமான ஒன்று- அவர் காவி நிறத்தின் காதலனாக
இருந்தார் என்பது!
காவி என்பது நமது தேசியக்கொடி அலங்கரிக்கும் நிறங்களில்
ஒன்று. ‘தியாகம்’ என்னும் பொருளில் இந்நிறம் பறக்கிறது. எனினும் கடந்த இருபது ஆண்டுகாலத்தில்
தேசியக்கொடியின் காவிநிறத்தை இந்து அடிப்படைவாதக் குழுக்களின் அடையாளமாய் எழுந்த காவிநிறம்
செறித்து ஆட்கொண்டது. இன்று காவி என்னும் நிறத்தின் பொருள்- ‘இந்துத்துவம்’ என்பதே.
இந்த இந்துத்துவம் ஆதரித்த – வளர்த்த- இந்தியாவின் முதல்குடிமகனாக உயர்த்திய மனிதராக
அப்துல்கலாம் நம் முன் வாழ்ந்து சென்றிருக்கிறார்.
கலாமுக்கும்
காவிக்குமான உறவு இந்திய அணுஆயுத ஆய்வுகளிலிருந்து மூர்க்கமாகத் தொடங்குகிறது
எனலாம். அணுஆயுதத்துக்கு எதிராக இயங்கிய நாடுகளில் முக்கிய இடத்தை இந்தியா
தக்கவைத்திருந்த பெருமையான காலம் ஒன்று இருந்தது- அது 1974-ஆம் ஆண்டு இந்திரா
காந்தியின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அணுஆயுத சோதனையில் காற்றில்
பறந்தது. பின்னர் 1998-ஆம் ஆண்டு வாஜ்பாயியின் பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்ற சோதனைமூலம்
இந்தியா தன்னை அணுஆயுத நாடாக பகிரங்கமாகவே உலகுக்கு அறிவித்தது. இந்த சோதனையை
நடத்திமுடித்த விஞ்ஞானிகள் குழுவின் (DRDO) தலைவராக இருந்தவர் அப்துல்கலாம். 74-ஆம்
ஆண்டிலாவது ‘அமைதிக்கான அணுஆயுத சோதனை’ என்று ஒரு
முகத்திரையை இந்தியா அணிந்திருந்தது. 98-ல் அந்த சமாதானமும்கூட இல்லாமல்-
’ஆமாம்… அழிவுக்குத்தான்… அதனால் என்ன…?’ என்னும் இறுமாப்போடு சிரித்தது இந்தியா.
பொக்ரான் அணு ஆயுத சோதனை வெற்றிக்குப்பின் அப்போதைய பிரதமர் வாஜ்பாயி,
அப்துல்கலாம் இருவரும் இணைந்து தம் குழுவோடு சிரிப்பதுபோல் வெளியான படத்தைப் பார்த்தால்
இதை நம்மால் உணரமுடியும். "நான் எனது காலடிக்குக் கீழ் மாபெரும்
அதிர்வொலியைக் கேட்டேன். அது நமது அச்சத்தை மீறி ஒலித்தது. அந்தத் தருணம்
அற்புதமானது” என்று பொக்ரான் அணுஆயுத வெடிப்பு சோதனை நடந்த கணத்தை விவரிக்கும்
கலாமின் மனநிலையை நாம் என்னவென்று கொள்வது? அந்த தருணத்தில் பிரதமருக்கான அறிவியல்
ஆலோசகருமாக கலாம்தான் இருந்தார் என்பதும் இந்த சோதனைக்கு ஒரு ஆண்டு முன்னர்
1997-ல்தான் அப்துல்கலாமுக்கு பாரதரத்னா விருது அப்போதைய பா.ஜ.க. அரசால்
வழங்கப்பட்டிருந்தது என் பதும் இந்த இடத்துக்குத் தேவையான சில உபரித்தகவல்கள்.
வாஜ்பாயியின்
பா.ஜ.க. அரசுதான் அப்துல்கலாமைக் குடியரசுத்தலைவராகவும் உயர்த்தியது. இந்திய
குடியரசுத்தலைவர்கள் வரிசையில் கே.ஆர். நாராயணனுக்குப் பின்னர் வருபவர்
அப்துல்கலாம். காந்தி கொலைச் சதியில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் சாவர்கர் என்பதை நாம்
அனைவரும் அறிவோம். கோட்சே கும்பலுக்கு பிஸ்டல் ஒன்றைக் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பிய அந்த நபரின் படத்தை நாடாளுமன்றத்தில். காந்தி படத்திற்கு எதிராகத் திறந்து வைக்க வாஜ்பேயி அரசு முடிவு செய்தது. ஆனால், அப்போது குடியரசுத் தலைவராக இருந்த கே. ஆர். நாராயணன் தன் பதவிக் காலம் முடியும்வரை அதற்கு இசையவில்லை. அடுத்து அப்துல் கலாமை அந்தப் பதவியில் உட்காரவைத்தவுடன் எந்த மறுப்பும் குற்ற உணர்வும் இன்றி காந்தி படத்துக்கு முன் சாவர்கர் படத்தைத் திறந்து வைத்து ‘காவி’ய மனிதர்களை
மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்
கலாம்.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நாக்பூரில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைமை யகத்திற்குச்
சென்று அந்த அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவருக்கு அஞ்சலில் செலுத்திய சம்பவத்தைக்
குறிக்கலாம்.
‘காவி’ சிந்தனையின்
முக்கிய அம்சங்களுள் ஒன்று ‘வலிமையான பாரதம்’. இதன் உள்ளுறை வடிவம் ‘அகண்ட
பாரதம்’. இதற்கு இவர்கள் நம்பும் முக்கிய ஆயுதங்களில் ஒன்றுதான் ’அணு’. கலாம் இந்த
‘அணு ஆய்வில் நெருக்கமான தொடர்புடையவர். (இதற்கு இணையாக பகவத் கீதையின் வரிகளை
ஆழ்ந்து நேசிப்பவர்). அணு ஆயுதம் வெடிக்கும் தருணத்தை ’அற்புதம்’ என உணர்பவர்.
எஸ்.பி. உதயகுமார், அருந்ததிராய், ப்ரஃபுல் பித்வாய், அசின் விநாயக், குமார்
சுந்தரம் என முக்கியமான சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும், பொதுமக்களும் இணைந்து
கடுமையாக எதிர்த்த கூடங்குளம் அணு உலைக்கு நொடியும் தாமதிக்காமல் அனுமதி
வழங்கியவர். ஜெர்மனி போன்ற நாடுகள் முற்றிலுமாக அணுசக்தியைப் புறக்கணித்து மாற்று
வழிகளில் எரிசக்தி தயாரிப்பதை கடைசிவரை கவனத்திலேயே கொள்ளாதவர். அதனால்தான் எஸ்.
குருமூர்த்தி போன்ற இந்துத்துவ சிந்தனையாளர்கள் ‘கலாம் தலைமையில் நிகழ்த்தப் பட்ட
பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்தியாவை உலக வல்லரசுப் பட்டியலில் சேர்த்து விட்டது’
என ஆனந்திக்கிறார்கள்.
தன் இளம் வயதில் கடுமையான இஸ்லாமிய
வாழ்முறைகள்மூலம் தனது தந்தையால் வளர்க்கப்பட்டதாகக் குறிப்பிடும் அப்துல்கலாம் (இந்தியா
டுடே நேர்காணல்- 2012) தன் வாழ் நாள் முழுவதும் தவறாமல் ரம்ஜான் நோன்பு மேற்கொள்பவராகவும்
இருந்திருக்கிறார். அதேசமயம் தனது ஆன்மீக குருவாக இந்து மதத்தைச் சேர்ந்த ப்ரமுக் சுவாமியைத்
தேர்வுசெய்யவும் செய்கிறார். கடவுளை உணரச்செய்யும் பெருவெளியை ப்ரமுக் சுவாமிதான் தனக்குள்
கடத்தியதாகவும் இதன்மூலம் முடிவற்ற ஒரு நிலையை தான் உணர்வதாகவும் தனது ஆன்மீக அனுபவமாகக்
குறிப்பிடுகிறார் கலாம். (Transcendence: My Spiritual Experiences
with Pramukh Swamiji)
இன்னும் சில
தகவல்களைப் பாருங்கள். கலாமுக்கு சமஸ்கிருதம் நன்றாகத் தெரியும். கீதையை சமஸ்கிருத
மொழியில் கற்றவர். அவருடைய உணவுப் பழக்கம் சைவம். கர்நாடக இசைக்கருவிகளில் ஒன்றான
வீணை வாசிக்கத் தெரியும். ஒவ்வொருநாளும் தவறாமல் கர்நாடக இசையைக் கேட்கும்
வழக்கத்தைக் கொண்டவர். இவையெல்லாம் கலாமின் தனி மனித ஆர்வம் சார்ந்தவை. சமூகம்
மற்றும் அரசியல் சார்ந்த அவருடைய கருத்துக்களில் சிலவற்றைப் பார்ப்போம்.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும்,
கல்வியாளர்கள் மத்தியிலும் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நரேந்திர மோடியின் நதிநீர்
இணைப்புத் திட்டத்தை (2002) முன்வரிசையில் நின்று ஆதரித்தவர்களில் கலாம் முக்கியமானவர்.
இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் கடும் பொருளாதார சேதாரம், நில அடுக்கு அமைப்புகளில்
ஏற்படவிருக்கும் பாதிப்புகள், இன்னும் முக்கியமாக ஏராளமான மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம்
கேள்விக்குள்ளாவது முதலானவற்றையெல்லாம் பரிநீதா தாந்தேகர் (தெற்காசிய அணைகள், நதிகள்
மற்றும் மக்கள் கூட்டமைப்பு), அஷோக் கோத்தாரி (கல்பவிருக்ஷா சுற்றுச்சூழல் அமைப்பு)
முதலானோர் விரிவாக முன்வைத்தனர். ஆனால் இவை எதையும் கலாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவே
இல்லை. ஒடிசாவில் நியாம்கரி பகுதியில் டோங்ரியா கோந்த் ஆதிவாசி மக்களையும் அவர்களின்
இயற்கை வளங்களையும் அழிக்கும் வேதாந்தா நிறுவனத்தின் அலுமினியத் தொழிற்சாலைத் திட்டத்துக்கு
பகிரங்க ஆதரவு தெரிவித்தார்.
மரணதண்டனைச் சட்டத்தை, தான் எப்போதும் கண்மூடித்தனமாக ஆதரித்ததில்லை
என்று முழங்கியபடியே தன் பதவிக்காலத்தில் கலாம் அனுமதித்த ஒரே ஒரு தூக்குதண்டனையும்கூட
(தனஞ்செய் சட்டர்ஜி) பின்னர் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. ஒரு பள்ளிச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்ததாக அவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு இந்தத் தூக்கு வழங்கப்பட்டது. பாலியல் வல்லுறவு வழக்குகளில் செய்யப்படுகிற மரபணு ஆய்வு தனஞ்செய் வழக்கில் செய்யப்படவில்லை என்றும் தக்க சட்ட உதவி தனஞ்செய்க்குக் கிடைக்கவில்லை என்றும் அவ்வாறு கிடைத்திருந்தால் தீர்ப்பு வேறாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் தனஞ்செய் தரப்பில் தூக்கு நாளுக்கு முந்தைய நாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட செய்திகள் ஏதும் நீதிமன்றங்களின் காதுகளில் விழவில்லை. கலாமின் காதுகளிலும்தான். ஆகஸ்ட் 2004 இல் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி “நீதி பணம் படைத்தவர்களுக்கானது இன்னொருமுறை நான் பிறக்க நேரிட்டால் ஒரு பணக்காரனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்று சொல்லியபடி இறந்துபோனார். இந்திய அளவில் கடும்
விமர்சனத்துக் குள்ளான அஃபசல் குருவின் மரணதண்டனைத் தீர்ப்பு குறித்தும், மிக
சமீபத்திய யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டது குறித்தும் கலாம் கொண்டிருந்த கருத்து
என்ன என்பது அவரைத் தவிர வேறு யார் ஒருவரும் அறியாத ரகசியம்.
2020-க்குள் இந்தியா
வல்லரசாகவேண்டும் என்று கனவு கண்டவர், இந்திய இளைஞர்களின் மனதில் எழுச்சியை விதைத்தவர்,
கடந்த கால் நூற்றாண்டுக் காலத்தில் பெருமளவிலான இந்துக்களால் ஆதரிக்கப்பட்ட
முஸ்லீம் பெரியவர், வாழ்நாள் முழுவதும் தான் ஏற்ற பல்வேறு பொறுப்புகளுக்கு அப்பால்
ஒரு ஆசிரியராகத் தன் பணியைத் தொடர்வதில், முடிந்தவரை மாணவர்களோடும் இளைஞர்களோடும்
இருப்பதை விரும்பியவர், பொதுவாழ்வில் எளிமை யைக் கடைபிடித்தவர், மக்கள்
குடியரசுத்தலைவர் எனப் புகழப்பட்டவர் இத்தனைப் பெருமைகளையும் எவ்வித அரசியல்
பின்புலமும் இல்லாமல் அடைந்தவர் என்னும் பல்வேறு ஆச்சரியங்களையும் பெருமைகளையும்
கொண்ட கலாம், இறுதிவரை தன்மனதுக்குள் ஒரு காவி நிறத்திலான போர்வையை
அணிந்திருப்பதில் மகிழ்வோடிருந்தார் என்பதையும் நாம் இங்கே கவனத்தில்
கொள்ளவேண்டித்தானிருக்கிறது.





